குலதெய்வக் கோவிலில் பலாப்பழத்துடன் வழிபாடு செய்த ஓ.பன்னீர் செல்வம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான செய்திகளை கூறவில்லை.
பலாப்பழத்துடன் வழிபாடு செய்த ஓ.பன்னீர் செல்வம்
Published on

தேனி,

அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இவரது குழுவானது மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஐயுஎம்எல் கட்சியின் சிட்டிங் எம்.பியான நவாஸ் கனி போட்டியிடுகிறார். மேலும், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் பல பன்னீர் செல்வங்கள் களமிறங்கியது அவருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான செய்திகளை சொல்லவில்லை.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வக் கோவிலான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோவிலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிட்ட சின்னமான பலாப்பழத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். மேலும், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது குலதெய்வக் கோவிலான ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com