ஒமைக்ரான் அச்சம்: சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சி நடக்குமா...?

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பொருட்காட்சி நடத்தப்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் அரசு தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

சென்னை தீவுத் திடலில் டிசம்பர் மாதம் இறுதியில் இந்த பொருட்காட்சி தொடங்கி 2 மாதங்கள் நடைபெறும். மத்திய, மாநில அரசின் துறைகள் சார்ந்த திட்ட சாதனைகள் குறித்த அரங்குகள் இடம்பெறும். இது தவிர சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகளவு இடம்பெறுவதால் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர்கள் இந்த பொருட்காட்சிக்கு அழைத்து வருவது உண்டு.

சிறுவர் ரெயில், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறுவதால் சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதி மக்களும் அதிகளவில் பொருட்காட்சியை காண வருவார்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை விடுமுறை காலத்தை கணக்கிட்டு இந்த பொருட்காட்சி நடத்தப்படுவதால், லட்சக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்து செல்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு நடத்துவதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்யத் தொடங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

தற்போது வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள் போன்ற பொதுமக்கள் கூடியக்கூடிய அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்காட்சியும் நடத்தலாம் என அரசு ஆலோசித்தது.

ஆனால் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் பொருட்காட்சியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடும் நிலை உருவாவதன் மூலம் தொற்று பரவக்கூடும் என கருதி பொருட்காட்சி தொடங்குவதை தள்ளி வைத்துள்ளது.

பொருட்காட்சி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக அதற்கான டெண்டர் விடப்படும். 100-க்கும் மேற்பட்ட கடைகள் பொருட்காட்சியில் இடம்பெறக் கூடுவதால் அதற்கான டெண்டர் இறுதி செய்த பின்னரே இந்த பணி தொடங்குவது வழக்கம். ஆனால் இதுவரையில் டெண்டர் விடப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய தொற்று பரவலை ஆய்வு செய்து அதன் பின்னர் பொருட்காட்சியை நடத்துவதா? ஒத்திவைப்பதா? என்பதை அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com