

சேலம்,
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது.
சேலத்தின் குரங்குசாவடி இரும்பாலை சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்பட்ட ரூ.21.97 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்பொழுது, கஜா புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சாலையில் விழுந்த 33,863 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
புயல் பாதிப்புகளை பார்வையிட முழுமையாக ஒரு நாள் தேவைப்படும். முன்பே திட்டமிடப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று மாலை வரை உள்ளது. அவற்றை முடித்து விட்டு செல்வது சாத்தியமில்லை.
எனவே புயல் பாதித்த பகுதிகளுக்கு இன்று செல்ல முடியவில்லை. இதனால் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்ல இருக்கிறேன் என்று கூறினார்.