

சேலம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையாளர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஹரிஹரசுதனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.