ஆன்லைன் சூதாட்டம் 44 பேர் உயிரை பலிவாங்கியதற்கு கவர்னரே காரணம் -முத்தரசன் குற்றச்சாட்டு

ஆன்லைன் சூதாட்டம் 44 பேர் உயிரை பலி வாங்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
ஆன்லைன் சூதாட்டம் 44 பேர் உயிரை பலிவாங்கியதற்கு கவர்னரே காரணம் -முத்தரசன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஜீவா பூங்கா அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது. வடசென்னை தொகுதி முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ஜீவானந்தம் பெயரையே இந்த பூங்காவுக்கு 'ஜீவா பூங்கா' என பெயர் சூட்டினார்.

ஜீவா பூங்கா பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. எனவே இந்த பூங்காவை புதுப்பித்து தரும்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.92 லட்சத்தில் ஜீவா பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

திறப்பு விழா

இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஜீவா பூங்கா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீவானந்தம் சிலையை நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

கவர்னர்தான் காரணம்

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக இதுவரையில் 44 பேர் இறந்து இருக்கிறார்கள். 44 உயிரை பலி வாங்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிதான் காரணம்.

தமிழக அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை.

கவர்னரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தங்க சாலை மணிகூண்டு அருகில் நாளை(அதாவது இன்று)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com