படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்

படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published on

விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாய மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதேபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கு வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.

இதனால் எங்கும் ரசாயனம், எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன.

இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்தப் பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.

இப்போது மக்கள் இதை உணரத் தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

செலவு அதிகம்

பி.ஏ. படித்து விட்டு இயற்கை விவசாயம் செய்து வரும் திருத்தங்கலை சேர்ந்த சிவப்பிரகாஷ்:-

நான் திருத்தங்கல் பகுதியில் பப்பாளி, வெள்ளரி ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் தயாரிப்பு செலவு மற்றும் வேலையாட்கள் செலவு அதிகரித்து விட்டது. ஆனால் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் போது அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்த பொருள்களுக்கு கிடைக்கும் விலை நம் பகுதியில் கிடைப்பதில்லை. அதிலும் கொரோனா பாதிப்புக்கு பின்பு விவசாய தொழிலாளர்களுக்கான ஊதியம் வெகுவாக உயர்ந்து விட்ட நிலையிலும், இயற்கை உரம் தயாரிப்பதற்கான செலவு அதிகரித்துவிட்ட நிலையில் இயற்கை விவசாயத்திற்கு செலவு அதிகமாகின்றது. ஆனாலும் விளைபொருள்களுக்கு அந்த அளவுக்கு விலை கிடைப்பதில்லை. பொதுமக்கள் இதற்கு உரிய விலை கொடுத்து வாங்கினால் இயற்கை விவசாயமும் சிறந்தோங்க வாய்ப்பு ஏற்படும்.

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த

என்ஜினீயர் வெங்கடேஷ்:-

கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். அரசு தரப்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இயற்கை விவசாயத்தின் மூலம் வெள்ளரி, பெரிய மிளகாய் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றேன். நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். இயற்கை உரம் தயாரித்து அதனை வெளியூர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ரசாயன உரங்களை தவிர்த்து அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.

கொய்யா மரங்கள்

விருதுநகரை சேர்ந்த இயற்கை விவசாயி அருள்தாஸ்:-

நான் விருதுநகர் பகுதியில் இயற்கை முறையில் 2,500 கொய்யா மரங்கள் வைத்துள்ளேன். நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். இயற்கை விவசாய முறையில் விலை பொருட்கள் சந்தைப்படுத்துவது மிகவும் கடினமான காரியம்.

அதிலும் சிலர் இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்த விளை பொருட்களை அதிக விலை சொல்வதால் தான் அதை சந்தைப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு தான். எனவே விளைபொருட்களையும் குறைவான விலைக்கு கொடுக்க வாய்ப்புள்ளது. இயற்கை விவசாயம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ரசாயனம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விவசாயி கொன்றையாண்டி:- ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் செல்லும் பகுதியில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். தற்போதைய காலத்தில் இயற்கை விவசாயம் செய்ய முடியுமா என்ற கேள்வி எண்ணற்ற பேரின் மனதில் எழுகிறது. அதை மாற்றுவது தான் எங்களை போன்ற விவசாயிகளின் நோக்கம் ஆகும்.

செயற்கை விவசாயத்தில் ரசாயனம் அதிகரிக்க, அதிகரிக்க மண் வளம் குறைந்து உற்பத்தி குறைந்து வருகிறது. மீண்டும் இயற்கை விவசாயத்தை செய்வதன் மூலம் மட்டுமே மண் வளத்தை ஆரோக்கியமாக மாற்ற முடியும்.

இளைஞர்கள் குழு

அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்த விவசாயி அசோக்குமார்:-

நான் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். எனது முன்னோர்களை பின்பற்றி விவசாயம் செய்கிறேன். அதிலும் இயற்கை விவசாயத்தின் நன்மை கருதி தொடர்ந்து அதில் ஈடுபட்டு வருகிறன். தற்போது படித்தவர்களை அதிக அளவில் இயற்கை விவசாயம் ஈர்த்து வருகிறது.

நான் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் காய்கறிகளை மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறேன். இயற்கை விவசாயத்தின் நன்மைகளை தெரிந்து காண்ட இளைஞர்கள் இன்று குழுக்களாக இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

கால்நடை கழிவு

ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி மணி:-

நான் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த 16 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையிலான கால்நடை கழிவுகளை உரமாக பயன்படுத்தி வருகிறேன். உணவில் ஏற்பட்ட மாற்றமே நோய்களுக்கான தொடக்கம் என்பதை உணர்ந்து பல குடும்பங்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பெற வீட்டின் பின்னால் உள்ள இடத்தில் தோட்டங்கள் அமைத்தும், சிலர் வீட்டின் மாடியில் சிறு தொட்டிகளிலும் இயற்கை முறையில் காய்கறி செடிகளை வளர்த்து வருகின்றனர்.

குப்பைகளை வெளியே போடாமல் இயற்கை உரமாக்கி உபயோகிக்கும் முறையும், கழிவு நீரை மறு சுழற்சிக்கு பயன்படுத்தினால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கை உணவும் சாத்தியமாகிறது. இயற்கை பொருட்களான வேம்பு, மஞ்சள், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களை வைத்து உரிய உரங்களாகவும் பயன்படுத்தலாம். பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் தேவையற்ற உர பயன்பாடுகளை தவிர்த்தாலே இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com