பாதயாத்திரையை ராமேசுவரத்தில் இருந்துஅண்ணாமலை தொடங்குகிறாரா?

பா.ஜனதா கூட்டத்தில் கோஷமிட்டவரால் சலசலப்பு ஏற்பட்டு நாற்காலிகள் வீசப்பட்டன. பாதயாத்திரையை ராமேசுவரத்தில் இருந்து அண்ணாமலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிர்வாகி கூறினார்.
Published on

பா.ஜனதா கூட்டத்தில் கோஷமிட்டவரால் சலசலப்பு ஏற்பட்டு நாற்காலிகள் வீசப்பட்டன. பாதயாத்திரையை ராமேசுவரத்தில் இருந்து அண்ணாமலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிர்வாகி கூறினார்.

நீர்மோர் பந்தல் திறப்பு

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கூண்டோடு கலைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இதனை தொடர்ந்து புதிய மாவட்ட தலைவராக தரணிமுருகேசன் அறிவிக்கப்பட்டார்.

நேற்று காலை ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பா.ஜனதா. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசியக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மாகார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் முருகன், மாநில மகளிர் அணி துணை தலைவி கலாராணி, மாநில பொறுப்பாளர்கள் பிரவின், ராமச்சந்திரன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் கூட்டம்

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ஒரு மகாலில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசினார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பாலா என்பவர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கூச்சலை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவர் மீது சர்களை வீசி தாக்க தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.

பிரதமர் போட்டியிட விருப்பம்

பின்னர் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக்கூடிய பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக ஒரு திட்டம் வகுத்துள்ளோம். அந்த திட்டத்தை நிறைவேற்றி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது இந்த மாவட்ட நிர்வாகிகளின் விருப்பம் மட்டுமல்ல, மாநில நிர்வாகிகள் அனைவரின் விருப்பமும் அதுதான். இது குறித்து நாங்கள் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கை குறித்து தேர்தல் நேரத்தில் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு தேர்தலின்போது மிகப் பெரிய கூட்டணி அமையும். மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. தி.மு.க. அரசு பா.ஜனதா மீது பல்வேறு பொய் வழக்குகளை பதிவிட்டு வருகிறது. இது போன்ற மிரட்டல் வழக்குகளை எல்லாம் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வழக்குகளை சந்தித்துதான் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com