பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா - காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்

பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா நடந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா - காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்
Published on

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழையசீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழையசீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல 2 பெருமாள்களும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டி பாடி வர பாலாற்றில் இறங்கி மறு கரையில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடாசலபதி கோவிலில் எழுந்தருளினர். அங்கு காவாந்தண்டலம், பகுதியில் இருந்து வந்திருந்த பெருமாள்களுடன் இணைந்து மண்டகப்படி கண்டருளி 4 பெருமாள்களும் திருமுக்கூடல் கிராமத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை புரிந்தனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சீபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com