

திருச்சி,
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய 5 இடங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லூரியில் இந்த மருந்து வினியோகம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் நான்காவது நாளான இன்றும் இந்த கல்லூரியில் மருந்து வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். அவர்களில் 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது. இதனால் மருந்து வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் திடீரென மருந்து விநியோக மையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களில் சிலர் தங்களது உறவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரவு மற்றும் அதிகாலை நேரத்திலேயே வந்து வரிசையில் காத்து நின்கின்றோம் ஆனால் மாத்திரை வழங்குவதற்கு உள்ளே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? என கூறினர். அதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.