

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறோம். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். எல்லோரும் எந்த வித அச்சமும் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இன்னும் கொரோனா முழுமையாக போகவில்லை. 3-வது அலை வரும் என்று சொன்னால்கூட அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மதுரையை பொறுத்தமட்டில் 60 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 3-வது அலையை தடுக்க முடியும்.
புதுச்சேரியில் இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பெண்களை போலீசார் பாதுகாத்து அழைத்துச் செல்கின்றனர். அதுபோல் தமிழகத்தில் சாத்தியமா? என்பது தெரியவில்லை. புதுச்சேரியில் வேறு விதமாக அணுகுகிறோம். தமிழகத்தில் வேறு விதம். அப்படிப் பார்த்தால் புதுச்சேரியில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கிறது, அது மக்களுக்கான முடிவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.