பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தஞ்சையில், பா.ஜ.க.-இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி தஞ்சையில், பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பங்கேற்ற எச்.ராஜா, காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தஞ்சையில், பா.ஜ.க.-இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா(வயது 17). தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கட்டாய மதமாற்றத்தினால் உயிரிழந்த லாவண்யா குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 கோடி வழங்கக்கோரியும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், கட்டாய மதமாற்றம் தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டுவரக்கோரியும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க.வினர் அறிவித்து இருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

இதனால் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டு, அதற்கு முன்பு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். ஆனால் பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திடீரென அறிவித்தனர்.

எச்.ராஜா-காடேஸ்வரா சுப்பிரமணியம்

அதன்படி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விசுவ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் சேதுராமன், பா.ஜ.க. மாநில இளைஞரணி தலைவர் வினோத் செல்வம், மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி, திரைப்பட நடிகை ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் புரட்சிகவிதாசன், மாவட்ட தலைவர்கள் அய்யப்பன்(அரியலூர்), சதீஷ்(தஞ்சை வடக்கு), மாவட்ட பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பஞ்சாட்சரம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

500 பேர் கைது

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி தஞ்சை-திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி ரவுண்டானா உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலிலும் இரும்பு கம்பிகளால் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com