சேலம், கடலூர் மற்றும் கோவை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், கடலூர் மற்றும் கோவை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை
Published on

சென்னை,

சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com