போலீசார் தாமத நடவடிக்கை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்

வடுகப்பட்டியில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக போலீசார் தாமத நடவடிக்கை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் தாமத நடவடிக்கை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்
Published on

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். இதில், தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், ஜெய்பீம் புரட்சிப் புலிகள் தலைவர் அருந்தமிழரசு, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி, சமூக நல்லிணக்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் முகமதுசபி மற்றும் தமிழ்ப்புலிகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், "பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து பொதுவீதியில் அழைத்துச் சென்றதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் எதிரொலியாக ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி மிரட்டினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், போலீசார் ஒருதரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்தனர். இந்த சம்பவம் குறித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்தது குறித்தும் நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com