

சென்னை,
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.
சுனில் அரோரா தலைமையில்...
தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவது எப்போது, அதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு நேற்று காலையில் வந்தனர். 2 நாட்கள் தங்கி இருந்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள, சுனில் அரோரா மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், துணை ஆணையர் சந்திரபூஷன் குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மல்லே மாலிக், கூடுதல் இயக்குனர் ஷிபாலி சரன் ஆகியோர் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து, தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
கட்சி பிரதிநிதிகள்
இந்த சந்திப்பு பிற்பகல் 12.15 மணிக்கு தொடங்கி 2.15 மணிவரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேர்தல் பிரிவு தேசிய செயற்குழு உறுப்பினர் ஓம் பதக், தமிழக துணைத் தலைவர் எம்.என்.ராஜா, தமிழக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்,
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தாமோதரன், எஸ்.கே.நவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரபாண்டியன், பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, ஜனார்த்தனம், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜி.பி.சாரதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கலைவாணன் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்த நிருபர்களிடம் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-
அ.தி.மு.க., தி.மு.க.
பொள்ளாச்சி ஜெயராமன்:- ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முன்பு நிழலுக்கான பந்தல், குடிநீர் வசதி அமைக்கப்பட வேண்டும். வாக்களிக்கும் எந்திரத்தின் மேல் புறத்தில் விளக்கு போடப்பட வேண்டும். மே மாத கடும் வெயிலை தவிர்ப்பதற்காக ஏப்ரல் 4-ம் வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணைய நடவடிக்கையை வரவேற்கிறோம். மக்களுக்காக செய்யப்பட்ட பணிகளை மக்களின் கவனத்திற்கு விளம்பரமாக கொண்டு செல்வது அரசின் கடமையாகும். அனைத்து அரசுகளும் இதை செய்கிறது.
ஆர்.எஸ்.பாரதி:- தேர்தல் ஆணையத்திடம் இதுவரை 6 மனுக்கள் கொடுத்திருந்தோம். அவற்றுக்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. அளிக்கும் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருவதை பத்திரிகைகளில் பார்க்கிறோம். எனவே ஒருதலைப்பட்சமாக நடக்கக் கூடாது என்று கூறினோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தி.மு.க.வின் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
சென்னைக்குள் அடங்கும் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாதவரத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. கதவுகள், கட்டிடங்கள் உடைந்திருக்கின்றன என்று தெரிவித்தோம். அதை உடனே கவனிப்பதாக உறுதி அளித்தனர்.
வாக்காளர் பட்டியல் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
பா.ஜ.க., காங்கிரஸ்
கே.டி.ராகவன்:- தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். தமிழ் புத்தாண்டு ஏப்ரலில் வருகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ தேர்தலை நடத்த வேண்டாம். தேர்தலுக்காக மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகளை கவனமுடன் கையாள வேண்டும். சில கட்சிகள் அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. பணப்பட்டுவாடா பற்றியும் கூறியிருக்கிறோம். அதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக பதிலளித்தனர்.
தாமோதரன்:- தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாநில போலீசார், ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்வதால் 234 தொகுதிகளிலும் துணை ராணுவப்படையை நிறுத்த வேண்டும்.
வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு மாத அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அதை 10 நாட்களாக குறைக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
வீரபாண்டியன்:- அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வசதியை வழங்கக்கூடாது என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளோம்.
டி.கே.ரங்கராஜன்:- ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பலருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இன்னும் தரப்படவில்லை என்று கூறினோம்.
கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கவேண்டும். தமிழகத்தில் அதிக சி.சி.டி.வி. வைப்பதாக நாங்கள் கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டனர். தேர்தல் தேதி பற்றி கேட்டபோது கூற மறுத்துவிட்டனர். அனைத்து கட்சிகள் கூட்டத்தை டெல்லியில் நடத்தி, அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டுகளை அனுமதிக்கும்படி கூறினோம்.
தே.மு.தி.க.
பார்த்தசாரதி:- சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருக்கக் கூடாது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். முரசு சின்னம் போல காணப்படும் கூடை சின்னத்தையும், தேங்காய் சின்னத்தையும் தமிழகத்திற்கு ஒதுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் அறிக்கையில், செயல்படுத்தக்கூடிய அறிவிப்பை மட்டுமே வெளியிட செய்ய வேண்டும். செயல்படுத்த முடியாத திட்டங்கள் இருந்தால் அந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
முரசு சின்னத்தை எங்களுக்கு புதுச்சேரியிலும் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
பின்னர் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் மதிய உணவுக்கு சென்றனர். பிற்பகல் 3.30 மணிமுதல் 4 மணிவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல்துறை தொடர்பு அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகல் 4 மணிக்கு மேல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டம் இரவு 9 மணிவரை நீடித்தது.
இன்று...
இன்று காலை 10 மணி முதல் 11 மணிவரை தேர்தலை ஒழுங்குபடுத்தும் முகமைகளுடன் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன் பின்னர் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் தமிழகத்தின் மூத்த அதிகாரிகளை கலந்தாலோசிக்கின்றனர். பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.