‘நீட்’ தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை: மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் தற்கொலை செய்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை: மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
Published on

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தில் ஜோதி ஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகிய 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

நீட் தேர்வினால் மாணவ செல்வங்கள் தற்கொலை, கொரோனா மரணங்களை விட கொடுமையானது. மாணவர்களின் நியாயமான ஆசையையும், கனவையும் வீணாக்கிய நீட் தேர்வு எனும் கொடுமையான, திணிக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக எத்தகைய கோரத்தன்மை தாண்டவமாடுகிறது? நீட் தேர்வின் கொடுமையால் அனிதா தொடங்கி ஆதித்யா வரையில் அனா, ஆவன்னாவென்று வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அந்த நாளை எதிர்பார்ப்போம். மாறுதல் நிச்சயம் வரும்.

மனிதநேய ஜனநாயக கட்சி

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:-

நீட் அச்சம் காரணமாக 3 பேர் தற்கொலை செய்திருப்பது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். எதிர்கால இளவல்களை இழந்து நிற்கும் இக்குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவிகள் போதாது. அவற்றை மும்முடங்கு உயர்த்தி கொடுக்கவேண்டும். இக்குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக மாணவர் சமுதாயம் தலைநிமிர்ந்து போராட தயாராக வேண்டும். தற்கொலை எண்ணங்களை தூக்கி எறிய வேண்டும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது பேரதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தை முளையிலேயே அழித்து விடக்கூடாது. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசு விழித்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு மூலம் நாட்டு மக்களிடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துவதாக தெரியவருகிறது. நீட் எனும் கொடிய நச்சு மாணவர்களின் நம்பிக்கையையும், அடியோடு கொன்று புதைப்பதாக இருக்கிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்:-

தற்கொலை என்ற பெயரில் மாணவ-மாணவிகளை மத்திய, மாநில அரசுகள் படுகொலை செய்துள்ளன. இந்த நீட் தேர்வை நீக்கவேண்டும். சமூக நீதிக்கு எதிரான, மருத்துவக்கல்வி கனவுக்கு எதிரான நீட் தேர்வு கூடவே கூடாது. இந்த நீட் தேர்வை நீக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 14-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com