விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்

சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்
Published on

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்களிலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும் விநாயகர் சிலை வைப்பதற்கும் ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலீசார் அனுமதியளித்து வருகின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டம் அன்னூரில் வசிக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோரியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது எனக்கூறி மனுக்களை முடித்து வைத்தார்.

மேலும், சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்கவில்லை என தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்றும் காட்டாமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி, இவை அனைத்தும் தனது சொந்த கருத்துகள் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com