சொத்து குவிப்பு புகார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஆரம்பகட்ட விசாரணை ஐகோர்ட்டில் தகவல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்று ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருவதாக ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சொத்து குவிப்பு புகார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஆரம்பகட்ட விசாரணை ஐகோர்ட்டில் தகவல்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், மோளையனூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கார் முன்பு தீக்குளிக்க தன்னை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தூண்டியதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மற்றொரு மனுவை சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு

அதில், உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தன்னுடைய பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்துள்ளார். பினாமி பெயரிலும் சொத்துகளை வாங்கியுள்ளார், அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.துரைசாமி ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை

மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். எனவே, பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்டு விசாரணையை வருகிற டிசம்பர் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com