

சென்னை,
தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 300 காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மின்உற்பத்தியாளர்கள் மின்சார வாரியத்துக்கு சர்சார்ஜ் ஆக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். இந்த தொகையை வசூலிக்க கோர்ட்டு உத்தரவிட்டும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருந்து வருகிறது. இந்த நிலுவைத்தொகை 8 ஆயிரத்து 300 மெகாவாட் திறனுடன், 2014-ம் ஆண்டிலிருந்து இன்று வரை தனியாரால் வணிகம் செய்யப்பட்ட மின்சாரத்தில் இருந்து பெறப்பட வேண்டிய சர்சார்ஜ் தொகையாகும்.
கடந்த 14 ஆண்டுகளாக இதுபோன்று தனியாருக்கு சாதகமாகவே மின்சார வாரியம் நடந்து வந்துள்ளது. இதனால் தான் இவ்வளவு பெரிய கடனை கொண்டு வந்து சேர்த்துள்ளது. தொழிலாளர்கள் சம்பளமே மாதந்தோறும் கடன் பெற்றே அளிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். இந்த நிலையிலும் வாரியத்தின் நடவடிக்கை அதிர்ச்சியை தான் அளிக்கிறது. எனவே மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை வசூலிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொகையை வசூலித்தால் தான் அடுத்து வரும் கடும் மின்சார கட்டண உயர்வில் இருந்து தமிழக மக்களை காக்க முடியும். தவறினால் இலவச மின்சாரத்தை இழப்பதுடன் பெரும் கட்டண உயர்வையும் சுமக்க வேண்டிவரும்.
கடன் தொகையை வசூலிக்க தவறியவர்களை மின்வாரிய பணியில் இருந்து உடனடியாக நீக்கினால் தான் அரசு அக்கறையுடன் செயல்படுவதாக நம்ப முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.