

சென்னை,
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சுகாதாரத்துறைக்கு எழுதுபொருட்கள் சப்ளை செய்யும், ராயப்பேட்டை எழுதுபொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் நயினார் முகமது என்பவரின் திருவல்லிக்கேணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.
அவரது வீட்டில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் அவரது வருமானமாக கணக்கிடப்பட்டது. இந்த தொகை, வருமானமாக அவர் காட்டிய ரூ.1 கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்து 500-யும் சேர்த்து, 2018-19-ம் நிதியாண்டுக்கு ரூ.4 கோடியே 52 லட்சத்து 48 ஆயிரத்து 500 வருமானம் என்று வருமானவரித்துறை கணக்கிட்டது.
இந்த தொகைக்கான அபராதத்துடன் கூடிய வரியாக ரூ.2 கோடியே 12 லட்சத்து 19 ஆயிரத்து 862 நிர்ணயம் செய்து, அதை செலுத்தும்படி நயினார் முகமதுவுக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நயினார் முகமது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நயினார் முகமதுவிடம் வரி வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.