இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிப்பு: மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

காளைகள், பசு மற்றும் எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிப்பு: மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
Published on

சென்னை,

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அரசியல் கட்சியினர் தவிர பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள், அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து 30ந் தேதி எஸ்.டி.பி.ஐ அமைப்பும், 1ந் தேதி திராவிடர் கழகமும், 2ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன.

இதற்கிடையே மாட்டு இறைச்சி விற்பனையாளர் சங்கம் மத்திய அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாட்டு இறைச்சி விற்பனையாளர் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசாணை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால் மத்திய அரசின் புதிய ஆணை அடிப்படை தனி மனித உரிமையை பறிக்கின்ற சட்ட விரோதமான செயலாக இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் இறைச்சி தொழிலை நம்பி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் திடீரென்று இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை வாங்க, விற்க தடை விதித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது, இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது.

ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதமாகவும், சட்டவிரோதமாகவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்ப பெறவேண்டும்.

இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும். மேலும் இந்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எதிர்கொள்ளப்போகிறோம். மத்திய அரசின் இந்த புதிய ஆணையை எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com