இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டம்

கோவில்கள் சம்பந்தமான இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவது போன்று இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள், நிலங்கள் குத்தகை உள்ளிட்ட பொருண்மைகள் பரிசீலிக்கப்பட்டு ஆணையர் அளவிலும், அரசு அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறான கோப்புகள் பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன.

தொடங்கி வைத்தார்

நீண்டகால கோப்புகளை பேணி பாதுகாத்திடும் பொருட்டு டிஜிட்டல் முறையில் படி எடுத்து கோப்பாக பாதுகாப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் நிலையான முடிவு கோப்புகள் உள்ளிட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும் டிஜிட்டல் முறை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பாதுகாக்கும் பணிக்கான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகள் காலபோக்கில் சிதிலமடையாத வகையில் பேணிகாக்க முடியும். இம்முறையில் இத்துறையின் சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்டகால கோப்புகளையும் பேணி பாதுகாத்திட படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), பெ.ரமணசரஸ்வதி, கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com