

திருவாரூர்,
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு இறுதித் தீர்ப்பின்படி சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோமில்ஸ் லிமிடெட் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
3 பேருக்கு சொந்தமாக வண்டாம்பாளை, கீழக்காவாதுகுடியில் உள்ள சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என அறிவிக்கப்படுகிறது.
சொத்துகளில் இருந்து பெறப்படும் வாடகை, நிலுவை வாடகை உட்பட அனைத்தும் அரசுக்கு சொந்தம் என அறிவிக்கப்படுகிறது என்று அதில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.