

மெரினா கடற்கரை மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னை மெரினா கடற்கரைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இருந்து கடற்கரையோரம் உள்ள சர்வீஸ்' சாலைக்கு செல்லும் பாதை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு
அடைக்கப்பட்டன. கலங்கரை விளக்கம் அருகேயும் சாலையை போலீசார் தடுப்பு வேலி கொண்டு அடைத்திருந்தனர். இதை தாண்டி யாரும் சர்வீஸ்' சாலைக்கோ அல்லது மணல் பரப்புக்கோ செல்லாதவாறு அதிகாலை முதலே போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வியாபாரிகள் ஏமாற்றம்
எனினும் ஒரு சிலர் பகல் நேரத்தில் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களும் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் மெரினா கடற்கரை காலையிலேயே களை கட்டி விடும். விடுமுறை நாள் என்பதால் பலர் பொழுதை கழிக்க குடும்பத்துடன் வருவார்கள்.ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி நேற்று யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் மெரினா கடற்கரையே வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடற்கரையில் கடை விரித்துள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீண்டும் கட்டுப்பாடு
ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மெரினா கடற்கரை மூடப்பட்டிருந்தது. இடை இடையே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் கூட மெரினா கடற்கரை திறக்கப்படவில்லை.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதிதான் மெரினா கடற்கரை திறக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு செல்ல மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாமல்லபுரம்
இதுபோல் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. மாணவ-மாணவிகளையும் காண முடியவில்லை. அரசு விதித்துள்ள தடையால் கடற்கரை பகுதிக்கு செல்லவும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கடற்கரைக்கு செல்ல முயன்ற பயணிகளுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.
பார்வையாளர் கட்டண மையங்கள்
குறைவான பயணிகளே அனைத்து புராதன சின்னங்களை காண வந்திருந்தனர். அவர்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே சென்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் சூழல் உள்ளதால் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் நுழைவு வாயிலில் உள்ள பார்வையாளர் கட்டண மையங்கள் மூடப்பட்டன. மொபைல் செயலி மூலம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கூட பயணிகள் கூட்டம் இல்லாததால் பல பஸ்கள் இருக்கை காலியாகவே பயணிகள் இன்றி இயங்கின.போதிய பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகளும், ஷேர் ஆட்டோ டிரைவர்களும் போதிய வருமானம் கிடைக்காமல் திண்டாடினர். அதேபோல் சாலையோர கடைகளிலும் வியாபாரம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.