பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு

பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு
Published on

பொது கலந்தாய்வு தொடக்கம்

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி முதல் தொடங்கியது. தலா 7 கலை பாடப்பிரிவுகளுக்கு தலா 60 இடங்கள், 7 அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு தலா 40 இடங்கள் என 700 இடங்களுக்கு மொத்தம் 4,740 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

30-ந்தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்தது. முதல் கட்ட முதல் பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடந்தது.

120 பேருக்கு அழைப்பு

தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு தலா 60 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தலா 120 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளில் குறைந்த அளவே கலந்தாய்வுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் தமிழ் பாடப்பிரிவில் 5 பேருக்கும், ஆங்கிலம் பாடப்பிரிவில் 3 பேருக்கும் இடம் கிடைத்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) வணிகவியல் பாடப்பிரிவுக்கும், நாளை (சனிக்கிழமை) அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 6-ந்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் பொது கலந்தாய்வில் 2-ம் கட்டமாக வருகிற 7-ந்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8-ந்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9-ந்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ந்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

மாற்று சான்றிதழ்

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும்.

2-ம் பொது கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி முதல் நடைபெறலாம். அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும், என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com