வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு

வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று (புதன்கிழமை) ரத்த மாதிரி சேகரிக்க புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
Published on

வேங்கைவயல் வழக்கு

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரிகளை சேகரித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை மூலம் அறிக்கை பெறப்பட்டது. இதேபோல விசாரணை நடத்தியவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

8 பேர் வர மறுப்பு

அந்த வகையில் முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர். இதில் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்து வந்தனர். அவர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் வர மறுத்த நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு எதிர்ப்பு தொவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் அனுமதி பெற சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி

இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேருக்கும் பரிசோதனைக்கு அனுமதி கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதில் 8 பேரும் ஆஜராகி தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்தனர். மேலும் எழுத்துபூர்வமாக கோர்ட்டில் 8 பேரும் வக்கீல் மூலம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து மனு மீதான உத்தரவை 4-ந் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி தள்ளிவைத்தார். அதன்படி நேற்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதில் அந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு, நாளை (அதாவது இன்று) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து 8 பேருக்கும் இன்று (புதன்கிழமை) டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட உள்ளது.

3 பேர் பெண்கள்

டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ள 8 பேரில் 3 பேர் பெண்கள். அவர்கள் சுபா, இளவரசி, ஜானகி ஆகியோர் ஆவர். மற்றவர்கள் முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன் ஆகியோர் ஆவர்.

இந்த வழக்கில் இதுவரை 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com