மொபைல்போனில் இயக்கப்படும் பம்பு செட்டுகள் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

மொபைல் போனில் இயக்கப்படும் பம்பு செட்டுகள் மானிய விலையில் வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்
மொபைல்போனில் இயக்கப்படும் பம்பு செட்டுகள் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

நீர்வள நவீன மயமாக்குதல் வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்

அமிழ்தம் என்றுணரற் பாற்று என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க விவசாய நிலங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சிறந்த நீர் அறுவடைக் கட்டமைப்பாக விளங்குபவை பண்ணைக்குட்டைகள். உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீன மயமாக்குதல் திட்டத்தின் கீழ், நீர்வள ஆதாரத்துறையால் தேர்ந்தெடுக்கப்படும் உபவடிநிலப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 2022-23-ஆம் ஆண்டில், 373 பண்ணைக்குட்டைகள் 3 கோடியே 73 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். பண்ணைக்குட்டைகளின் கரைகளில் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திடும் வகையில் பழச்செடிகள், மரக்கன்றுகள் போன்றவை வளர்த்திட உதவி செய்வதுடன், மீன் வளத்துறையுடன் ஒருங்கிணைந்து இப்பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடமாடும் பழுது நீக்க வாகனம்

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை வலுப்படுத்துவதற்காக, மூன்று எண்கள் டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்களும், ஏழு எண்கள் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களும் கொள்முதல் செய்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களையும், கருவிகளையும் பழுதுபார்த்திட ஏதுவாக மூன்று நடமாடும் பழுது நீக்கும் வாகனங்கள் அமைக்கவும் 2022-23 ஆம் ஆண்டில் மூன்று கோடியே 54 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

டெல்டா மாவட்டங்களில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருதல்

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராக கொண்டு செல்வதற்கும், சரியான நேரத்தில், தேவையான அளவில் நீர் கடைமடையை அடையவும் சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாருவது மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு, காவேரி, வெண்ணாறு வடிநிலப்பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2022-23 ஆம் ஆண்டில் ஆயிரத்து ஐநூற்று எண்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு சி, டி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், இரண்டு இலட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஐந்து கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்குதல்

விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டும், விவசாயியின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடும் வகையிலும் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய்

மானியத்தில் வழங்க 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள மூன்று ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com