'பரிதாபமான நிலையில் ரெயில் சேவை' - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
'பரிதாபமான நிலையில் ரெயில் சேவை' - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

சென்னை-ஹவுரா அதிவிரைவு ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் எடுக்காதவர்கள் அதிக அளவில் குவிந்ததால், முன்பதிவு செய்த பயணிகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரெயில்வே அமைச்சகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சென்னை-ஹவுரா அதிவிரைவு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை டிக்கெட் எடுக்காத பயணிகள் ஆக்கிரமித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

நமது ரெயில்வே சேவையின் பரிதாபமான நிலையை விடவும் மோசமாக இருக்கும் ஒரே விஷயம், ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியப் போக்குதான். சமீப காலங்களில் இதுபோன்ற செய்தி வருவது இது முதல் முறை இல்லை. இது கடைசி முறையாக இருக்கப்போவதும் இல்லை. இது டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இழைக்கப்படும் அநியாயம் மட்டுமல்ல, இதில் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சினையும் உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ரெயில் நிலையத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெற்கு ரயில்வே விசாரிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களின் சிரமத்தை குறைக்க உதவும் வகையில் இதுபோன்ற வழித்தடங்களில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.

ரெயில் நிலையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான விரிவான சாலை வரைபடத்தை ரெயில்வே அமைச்சகம் உருவாக்கி, அனைத்து வழிகளிலும் பயணிகளின் போக்குவரத்து மற்றும் தேவைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்."

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com