

சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதிகளான நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி நளினி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் நளினி, ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், எங்களை விடுவிக்கக்கோரி தமிழக அமைச்சரவை அனுப்பி உள்ள தீர்மானத்தை கவர்னர் சட்டப்படி ஏற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஏற்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.
கவர்னர் தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி கடமையை செய்ய தவறிவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புகளை மீறி அவர் செயல்படுகிறார். எனவே கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் என்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.