குடியரசு தினவிழா: கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'தமிழ்நாடு...!'

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா: கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'தமிழ்நாடு...!'
Published on

சென்னை,

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதனையடுத்து, தமிழக சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல்அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவர்னர் சட்டசபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்தார்.

மேலும், கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் ஜனாதிபதியை சந்தித்து கவர்னருக்கு எதிரான புகாரை வழங்கினர். இதனையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று வந்த பிறகு தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில். வரும் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு கவர்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com