தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது-பள்ளி மாணவன் உயிர் தப்பினான்

பொன்னமராவதி அருகே தொடர் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
Published on

தொடர் மழை

பொன்னமராவதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காமராஜ் நகர் காலனியில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வீட்டில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் (வயது 66) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பலத்த மழையின் காரணமாக வீட்டின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் முன்பகுதியில் அமர்ந்து படித்து வந்த அவரது மகன் சந்துரு (9) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலனி குடியிருப்புகளில் நாங்கள் வசித்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. அதனை நாங்கள் மறுசீரமைப்பு செய்தாலும் மழை காலங்களில் அவ்வப்போது இடிந்து விழுகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி கன மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தநிலையில் 3-ம் வகுப்பு மாணவனான சந்துரு மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு எங்களுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com