தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு - தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல்

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு - தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல்
Published on

சென்னை,

2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் பொருளாதாரப் பிரிவிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 741 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 549 கோடி ரூபாய் வரி மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் தமிழக அரசால் ஈட்டப்பட்ட வருவாய் 69 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி., வணிக வரி, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகள் மீதான வரிகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டதில் தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் டாஸ்மாக் கடைகளில் சில்லறை விலையை விட அதிக விலைக்கு மது விற்றபோதிலும், அதற்கான வரியை குறைத்து, கடந்த ஆட்சியில் இருந்த தமிழக அரசு வசூல் செய்ததாகவும், விற்பனைக்கான ரசீதுகள் அளிக்காமல் முறைகேடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று பதிவு அலுவலர்கள் ஆவணங்களை தவறாக வகைப்படுத்தி 11 பதிவு அலுவலகங்களில் குறைவாக முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com