கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேன்

கூடலூர் நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேனை உள்ளூர் டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர்.
கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேன்
Published on

கூடலூர் நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சுற்றுலா வேனை உள்ளூர் டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர்.

சுற்றுலா வாகனங்கள்

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாக விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக 2 மலைப்பாதைகளும், கேரளா-கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு சாலைகள் செல்கிறது. பெரும்பாலும் சமவெளி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மலைப்பிரதேசத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதில்லை.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. குன்னூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். இதேபோல் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களும் ஊட்டிக்கு சென்று விட்டு திரும்பும் சமயத்தில் கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது.

சுற்றுலா வேன்

கூடலூர் நகரில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்களால் பொதுமக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை 4.45 மணிக்கு கர்நாடகா பதிவு எண் கொண்ட சுற்றுலா வேன் ஊட்டியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கூடலூர் அக்ரகார தெரு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதை பார்த்த கூடலூர் வாகன டிரைவர்கள் ஓடி வந்து சுற்றுலா வேனை கட்டுப்படுத்த, டயருக்கு முன்பு அடுத்தடுத்து கற்களை போட்டு தடுத்து நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத டிரைவர்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com