ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க

மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
Published on

சென்னை

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமுள்ள பதவியிடங்களில் போட்டியின்றி தேர்வானவர்கள் போக, மீதமுள்ள 23978 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய ஆரம்பித்தன. ஓட்டுச்சீட்டு முறை என்பதால் ஓட்டுக்களை தனித்தனியாக பிரித்து எண்ணியதால் முன்னணி நிலவரங்கள் தெரிய தாமதம் ஆகின. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க எண்களிலேயே முன்னிலையில் இருக்கின்றன.

மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது.

அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

9 மாவட்டங்களிலும் உள்ள ஒன்றியங்களில் கிட்டதட்ட அனைத்து ஒன்றியங்களையுமே தி.மு.க. கைப்பற்றுகிறது. ஒன்றியங்களை பொருத்தவரை அனைத்து இடங்களிலும் தி.மு.க. 90 சதவீதத்துக்கு மேலாக வெற்றி பெற்று இருக்கிறது.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. பிற கட்சிகளை பொருத்தவரையில் பா.ம.க. ஓரளவு இடங்களை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் இந்த அளவுக்கு மிக அதிக இடங்களை கைப்பற்றவில்லை. ஆனால் இந்த 9 மாவட்ட தேர்தலில் தி.மு.க. பெரும்பாலான இடங்களை வாரிசுருட்டி இருக்கிறது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த இமாலய வெற்றியாக கருதப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. அதில் கிடைத்துள்ள வெற்றி தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர் ஏசு பாதமும் வெற்றி பெற்றனர்.

அதேபோல், திமுக சார்பில் 6-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக மனோகரனும், 18-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அவரது மனைவி சரஸ்வதியும் வெற்றிப் பெற்றனர்.

திமுக சார்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ் அமுதனும், 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழியும் வெற்றி பெற்றனர்.

சென்னை அடுத்த ஐயப்பந்தாங்கல் ஊராட்சியில், முதலில் வெற்றி பெற்று, 2 முறை மறுவாக்கு எண்ணிக்கைக்கு பின் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐயப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்யாணி பெரியநாயகம், ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அதில் உடன்பாடு இல்லாத எதிர்தரப்பு வேட்பாளரின் புகாரின் பேரில், மீண்டும் 2 முறை மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அதில், ஜெமிலா பாண்டுரங்கன் 120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணியின் ஆதரவாளர்கள் சுமார் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றதையடுத்து, வேட்பாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உள்ளாட்சித் தேர்தலில், பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னத்தாய் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்றதால், அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com