சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்

சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எப்படி எடுத்து சென்றோம்? என்பது குறித்து கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்
Published on

சென்னை,

சேலம்-சென்னை ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓராண்டுக்கு மேல் துப்பு துலக்கி கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

அவர்களில் 5 பேரிடம் 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கொள்ளை நடந்த குறிப்பிட்ட ரெயிலில் அதிகளவில் பணம் வருவதை முன்கூட்டியே அறிந்தோம். இந்த ரெயில் சின்ன சேலம்-விருத்தாச்சலம் இடையே மேம்பால பணிக்காக மெதுவாக இயக்கப்படுவதையும் நீண்ட நாட்களாக கண்காணித்தோம். எனவே திட்டமிட்டு அந்த ரெயிலில் நாங்கள் 5 பேரும் ஏறினோம்.

பின்னர் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு சென்றோம். நாங்கள் வைத்திருந்த பேட்டரி கட்டர் எந்திரம் மற்றும் கையால் அறுக்கக் கூடிய கருவிகள் மூலம் பெட்டியின் மேற்கூரையில் துவாரம் போட்டோம்.

அதில் எங்கள் கும்பலை சேர்ந்த 2 பேர் உள்ளே இறங்கி, பணம் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகளை உடைத்தனர். அதில் இருந்த பணத்தை 6 லுங்கிகளை ஒன்றாக இணைந்து, மூட்டை கட்டினோம். எங்கள் கும்பலை சேர்ந்த மகேஷ் பார்தி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் முன்பு காத்திருந்தார்.

குறிப்பிட்ட இடத்துக்கு ரெயில் வந்தபோது பண மூட்டையை அவரிடம் தூக்கி எறிந்தோம். அப்போது ரெயில் மெதுவாக சென்றதால், நாங்கள் ஒவ்வொருவராக ரெயிலில் இருந்து கீழே குதித்தோம்.

திருடிய பணத்தை அனைவரும் மகிழ்ச்சியாக சரிசமமாக பங்கீட்டு ஊருக்கு சென்றோம். உல்லாசமாக செலவு செய்தோம். இந்த நிலையில் ரூ.500 நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. நாங்கள் கொள்ளையடித்த பணத்தில் ரூ.500 நோட்டுகள் அதிகமாக இருந்ததால், அதனை செலவு செய்ய வழியின்றி தீயிட்டு எரித்துவிட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com