'வீட்டு வாசலில் ஆவி அழுகிறது' பரிகாரம் செய்வதாக கூறி தங்க மோதிரத்தை சுருட்டிய குடுகுடுப்பைக்காரன்...!

திருமங்கலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி மோதிரத்தை திருடிய குடுகுடுப்பைக்காரனை போலீசார் கைது செய்தனர்.
'வீட்டு வாசலில் ஆவி அழுகிறது' பரிகாரம் செய்வதாக கூறி தங்க மோதிரத்தை சுருட்டிய குடுகுடுப்பைக்காரன்...!
Published on

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது தந்தை மாசானம் அண்மையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த குடுகுடுப்பைக்காரன் சுபாஷின் வீட்டின் அருகே நின்று, வீட்டில் இறந்த நபரின் ஆவி வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டிருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் இன்று காலை வந்த குடுகுடுப்பைக்காரன் சுபாஷிடம் இரவு சொன்ன விஷயங்களை கூறி பரிகாரம் செய்தால் நல்லது எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சுபாஷ் அவரது குடும்பத்தினரும் குடுகுடுப்பைக்காரனை வீட்டிற்குள் அழைத்து பரிகாரம் செய்துள்ளனர்.

வீட்டிற்குள் சென்று பரிகாரம் செய்த குடுகுடுப்பைக்காரன் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் தகடுகளை போட்டு சுபாஷ் கையில் ஒரு தகடையும் விபூதியையும் வைத்து இருக்கமாக மூடிக்கொண்டு பாத்திரத்திற்குள் கைவிடும் படி கூறியுள்ளார்.

தண்ணீர் உள்ள பாத்திரத்துக்குள் கைவிட்ட போது கையில் சுடுவது போல் தெரிந்தால் கையை எடுக்க முற்பட்டபோது குடு குடுப்பைக்காரன் சுபாஷ் கையை அமுக்கி மீண்டும் தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். பின்னர் பரிகாரம் முடித்து பணம் கேட்டுள்ளார்.

வீட்டில் பணம் இல்லாததால் ஏடிஎம்மில் எடுத்து வருவதாக கூறி அவர் தாயிடம் சொல்லிவிட்டு சுபாஷ் ஏடிஎம் மையத்திற்குச் சென்றார். அப்போது தனது கையில் ஒட்டி இருந்த விபூதியை துடைத்த போது சுபாஷ் கையில் இருந்த மோதிரம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுபாஷ் உடனடியாக வீட்டிற்கு வந்து குடுகுடுப்பைக்காரனை விசாரித்த போது எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார்.

பின்னர், திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் குடுகுடுப்பைக்காரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முத்துமணி (வயது27) என்பது, ஏற்கனவே பலரிடம் இது போன்று ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com