

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி இந்த அரிய நிகழ்வு நேற்று ஏற்பட்டது. ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் தோன்றியது. இந்த சூரிய கிரகணம் குறித்து மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வு, இந்திய நேரப்படி காலை 8:50 மணி முதல் கொடைக்கானல் ஆய்வகத்தில் விளக்கத்துடன் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
இதேபோல் வானியல் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எபிநேசர், பெங்களூரு வான் இயற்பியல் ஆய்வக ஆராய்சியாளருடன் இணைந்து காணொளி காட்சி மூலம் விளக்கமளித்தார். அப்போது, வளைய-பூரண கிரகணம் ஒரு அரிய வகை சூரிய கிரகணம் ஆகும். இது பூமியின் மேற்பரப்பில், சந்திரனின் நிழல் நகரும் போது அதன் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வளைய-பூரண கிரகணம் என்பது, முழு சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
சந்திரனின் கரு நிழலின் இருண்ட பகுதி, சூரியனை முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் கருநிழல் பூமியை அடையாமல், சந்திரனை சுற்றி சூரிய ஒளி வளையத்தை விட்டு செல்லும் போது வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று எடுத்துரைத்தார்.