மதுபிரியர்களுக்கு வரைபடம் அனுப்பி சாராயம் விற்பனை

பண்ருட்டி அருகே மதுபிரியர்களுக்கு வரைபடம் அனுப்பி சாராயம் விற்பனை நடக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீஸ் நிலையம் முன்பு காலி சாராய பாக்கெட்டுகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபிரியர்களுக்கு வரைபடம் அனுப்பி சாராயம் விற்பனை
Published on

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மேல் கவரப்பட்டு கிராமம். புதுச்சேரியில் இருந்து ஒரு கும்பல் சாராயத்தை கடத்தி வந்து மேல்கவரப்பட்டு கிராமத்தில் விற்பனை செய்து வருகிறது. அதேபோன்று கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் இங்கு ஜோராக நடந்து வந்தது. அவ்வப்போது, பண்ருட்டி போலீசார் இந்த பகுதியில் சோதனை நடத்தி சாராயம், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும், அங்கு விற்பனை என்பது குறைந்தபாடில்லை.

வரைபடம் வெளியிட்ட சாராய வியாபாரிகள்

இந்த நிலையில் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தும் வகையில் எந்தெந்த பகுதியில் சாராயம் விற்கப்படும் என்பது பற்றி மதுபிரியர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடத்தை (ரூட் மேப்) தயார் செய்துள்ளனர்.

அந்த வரைபடத்தை செல்போனில் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, தங்களது வியாபாரத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த வரைபடத்தில் எந்த வழியாக செல்ல வேண்டும், செல்லக்கூடாது என்பதை குறித்தும், சாராயம் உள்ளிட்டவை கிடைக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் சரி என்பதை குறிப்பிடும் 'ரைட்' குறியீடும் இடம் பெற்று இருந்தது.

மதுபிரியர்கள் படையெடுப்பு

இதனால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள், சாராயம் வாங்குவதற்காக மேல்கவரப்பட்டு கிராமத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு போதை தலைக்கு ஏறியதும் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் அங்கு ஏற்பட்டு வந்தது.

இது அந்த பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்று காலை கிராம மக்கள் ஒன்று திரண்டு, பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

போலீஸ் நிலையம் முன் போராட்டம்

அப்போது, மேல் கவரப்பட்டு கிராமத்தில் சாராயம், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். அந்த சமயத்தில் ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்த காலி சாராய பாக்கெட்டுகளை போலீஸ் நிலையம் முன்பு கொட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு சாராயம், கஞ்சா வாங்க வருபவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள வரைபடத்தையும் போலீசாரிடம் கொடுத்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

4 பேர் கைது

இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் அதிரடியாக நேற்று மேல் கவரப்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சாராய வியாபாரிகளான ஸ்டீபன்(வயது 25), ரவி (50), தனபால்(52), அஞ்சாபுலி (65) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com