தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 416 வழக்குகளுக்கு தீர்வு
Published on

தேசிய மக்கள் நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கினார்.

மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஸ்வர், நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், குன்னம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கவிதா மற்றும் வங்கி வாராக்கடனுக்கான அமர்வில் ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கண்ணையன் ஆகியோரின் முன்னிலையில் 6 அமர்வுகளாக நடைபெற்றது.

416 வழக்குகளுக்கு தீர்வு

இந்த அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது. இதில் 97 வங்கி வழக்குகள் ரூ.95 லட்சத்து 3 ஆயிரத்து 354-க்கும், 53 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.3 கோடியே 47 லட்சத்து 45 ஆயிரத்துக்கும், 2 சிவில் வழக்குகள் ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்துக்கும், 264 சிறு குற்ற வழக்குகள் ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் என மொத்தம் 416 வழக்குகள் ரூ.4 கோடியே 55 லட்சத்து 93 ஆயிரத்து 354-க்கு தீர்வு காணப்பட்டது.

தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் நஷ்ட ஈடு தொகைக்கான ஆணையை வழங்கினார். இதில் வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com