முழு ஊரடங்குக்கு மத்தியில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வு தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி

முழு ஊரடங்குக்கு மத்தியில் சிவில் சர்வீசஸ் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
முழு ஊரடங்குக்கு மத்தியில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வு தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி
Published on

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 26 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிலையில், அதில் வெற்றிபெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.

அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மைத் தேர்வு கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 400 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தேர்வர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 9-ந் தேதி (நேற்று) தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஊரடங்குக்கு மத்தியில் நடந்தது

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தேர்வர்கள் அந்த நாட்களில் எப்படி தேர்வை எதிர்கொள்ள வர முடியும்? தேர்வு தள்ளிவைக்கப்படுமா? என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) திட்டமிட்டப்படி தேர்வு நடக்கும் என்றும், தேர்வர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என்றும் கூறியது.

அதற்கேற்றாற்போல், தமிழக அரசும் முழு ஊரடங்கில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. தேர்வர்கள் அவர்களுக்கான ஹால்டிக்கெட்டை காண்பித்து, ஊரடங்கு காலத்திலும் பயணம் செய்து வந்து தேர்வை எதிர்கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது.

அதைப் பின்பற்றி சென்னையில் முழு ஊரடங்குக்கு மத்தியில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை தேர்வர்கள் எதிர்கொண்டனர். நேற்று காலை முதன்மைத் தேர்வு பொதுப்பாடம்-3 தேர்வும், பிற்பகலில் பொதுப்பாடம்-4 தேர்வும் நடந்து முடிந்தன. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு மின்சார ரெயில்கள் மற்றும் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணித்து வந்தனர்.

சிறப்பு பஸ்கள்

அதேபோல் கோயம்பேடு, தாம்பரம், பாரிமுனை, திருவான்மியூர், அண்ணா சதுக்கம், ஆவடி உள்பட சில பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு மதிய உணவு வழங்குவதாக அறிவித்து இருந்தது. ஆகவே தேர்வர்கள் எந்தவித சிரமமும் இன்றி நேற்று தேர்வை சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு வருகிற 15 (சனிக்கிழமை) மற்றும் 16 (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை இந்திய மொழித்தாள் தேர்வும், பிற்பகலில் ஆங்கிலத் தேர்வும், 16-ந் தேதி காலை விருப்பத்தாள்-1 தேர்வும், பிற்பகலில் விருப்பத்தாள்-2 தேர்வும் நடக்க இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com