அரசு உதவிபெறும் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

விதிகளை மீறி நிலம் விற்பனை செய்யப்பட்டதால், அரசு உதவிபெறும் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி நாகை மாவட்ட கல்வி அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

எங்கள் கிராமத்தில் அரசு உதவிபெறும் விநாயகர் ஆரம்பப்பள்ளி கடந்த 1953-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. பலர் இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

இந்த பள்ளியை எங்கள் குடும்பத்தினர் கவனித்துவந்தோம். இந்நிலையில் இந்த பள்ளியின் நிர்வாகத்தை எனது மாமாவிடம் இருந்து வாங்கியதாகவும், பள்ளியின் தாளாளர் தான்தான் என்றும் கூறி அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பள்ளியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.

நிலம் விற்பனை

இது தொடர்பாக நாங்களும், எங்கள் பகுதியை சேர்ந்தவர்களும் கேட்டபோது எங்களை அவர் மிரட்டுகிறார். இதற்கிடையே பள்ளிக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை பன்னீர்செல்வம் என்பவருக்கு சுரேஷ்குமார் விற்பனை செய்துள்ளார். மாவட்ட கல்வி அதிகாரியிடம் எந்த ஒப்புதலையும் பெறாமல் விதிகளுக்கு முரணாக பள்ளியின் நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

பள்ளியை சரிவர நடத்தாததால் மாணவர்களின் எண்ணிக்கை 250-லிருந்து 42 ஆக குறைந்துவிட்டது. ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் சுரேஷ்குமார் 5-லிருந்து 2 ஆக குறைத்துவிட்டார். பள்ளியை மூடிவிட்டு அதை லாட்ஜாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பழமைவாய்ந்த இந்த பள்ளியை அரசு ஏற்று நடத்துவதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

சிறப்பு அதிகாரி

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கான்சியஸ் இளங்கோ ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பார்க்கும்போது அரசு உதவிபெறும் பள்ளியின் சொத்துகளை மாற்றம் செய்ததில் விதிமீறல் உள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, இந்த பள்ளியை அரசு நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அதிகாரியை மாவட்ட கல்வி அதிகாரி நியமிக்க வேண்டும். பள்ளிக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்ததை ரத்து செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com