முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற 1,470 பேருக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,470 பேருக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற 1,470 பேருக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்
Published on

பரிசளிப்பு விழா

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார்.

மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 7 ஆயிரத்து 616 பேர் பங்கேற்று விளையாடினர். இதில் ஆயிரத்து 470 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.ஆயிரமும் என மொத்தம் ரூ.30 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் மாநில அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 630 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

விளையாட்டு தலைநகரம்

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது கூறியதாவது:- முதல்-அமைச்சரின் கோப்பைக்கான 12 விளையாட்டுகளில் 5 பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றும் வகையில் பல்வேறு வகையான உலக அளவில் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நமது வீரர்- வீராங்கனைகளிடையே விளையாட்டு போட்டிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு துறையில் சாதிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சாம்பியன்ஸ் அறக்கட்டளை

அதன்பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட 44-வது ஒலிம்பியாட் போட்டி உலகமே வியந்து பார்க்கும் வகையில் முதல்-அமைச்சரால் சிறப்பாக நடத்தப்பட்டு தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்து விளங்கும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, விளையாட்டுகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com