

விக்கிரவாண்டி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் தஞ்சைக்கு வந்து இரவு தங்கினார். நேற்று காலையில் அவர் புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
கந்தர்வகோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதனால் மு.க.ஸ்டாலினால் தொடர்ந்து அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை பயணத்தை பாதி வழியில் ரத்து செய்துவிட்டு அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
சென்னை வரும் வழியில் விக்கிரவாண்டியில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா பணிகளையும் முடித்து விட்டோம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் அறிக்கை விட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட போகிறேன் என்று சொன்னவர் இன்னும் செல்லவில்லை. அவர் செல்லாததற்கு காரணம் எந்த நிவாரண பணிகளும் நடக்கவில்லை.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. குடிக்க தண்ணீர் இல்லை, பால் கிடையாது, மரங்கள் விழுந்திருக்கிறது. எந்த போக்குவரத்தும் இல்லாத சூழ்நிலையில் மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.
நான் நாகப்பட்டினம், தரங்கம்பாடி, வேதாரண்யம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் எல்லாம் நேரடியாக சென்று மக்களை சந்தித்தேன். ஆறுதல் சொன்னேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். அப்பொழுது எந்த அதிகாரிகளும் வரவில்லை. முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் வரவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் ஒரு முதல்-அமைச்சர் வந்து உடனடியாக அங்கு சென்று ஏறக்குறைய 4 அல்லது 5 நாட்கள் தங்கியிருந்து பணிகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும். ஆனால், வருவதற்கான சூழ்நிலை இல்லை. அதற்கு காரணம் மக்களுடைய எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாலை மறியலில் ஈடுபட்டு வெகுண்டெழுந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.
ஆகவே, உடனடியாக அரசு இனியும் தூங்கிக்கொண்டிருக்காமல் மெத்தனத்தை கைவிட்டுவிட்டு உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டு உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், அமைச்சர் கிராம பகுதிகளுக்கு உள்ளே போகாமல் முக்கியமான சாலைகளில் மட்டும், காரில் வந்து ஏதோ குறைகள் கேட்க வந்திருப்பதாக மக்கள் அவரை வழிமறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் காரை நடுரோட்டில் விட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து காவல்துறை பாதுகாப்போடு தப்பித்து சென்றிருக்கிறார் என்று பத்திரிக்கையில் புகைப்படத்தோடு செய்தி வந்திருக்கிறது என்றார்.