வேதாரண்யம் அருகே, வகுப்பறை வசதி இல்லாததால்மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்

வேதாரண்யம் அருகே, வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கிறார்கள்.
வேதாரண்யம் அருகே, வகுப்பறை வசதி இல்லாததால்மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்
Published on

வேதாரண்யம் அருகே வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் மாணவர்கள் பாடம் படித்து வருகிறார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளியில் இந்த பரிதாப நிலை நீடிக்கிறது.

கைகொடுக்கும் கல்வி

இளமையில் வறுமை, முதுமையில் தனிமை ஆகிய இரண்டுமே எந்த மனிதனுக்கும் நேர்ந்து விட கூடாத சோகங்கள். இதில் இளமையில் வறுமை இருந்தால் அந்த மனிதனின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். இளமையில் வறுமையில் தவிப்பவர்கள் வாழ்வில் முன்னேற கல்வி கை கொடுக்கிறது.

அத்தகைய கல்வியை அரசு, இலவசமாக வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் கணினி வசதியுடன் கூடிய வகுப்பறைகளும் இன்று பழக்கத்துக்கு வந்து விட்டன.

வகுப்பறை இல்லாத பள்ளிகள்

ஆனால் சில இடங்களில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை, கழிவறைகள் இல்லை, மின் வசதி இல்லை என மாணவர்களும், பெற்றோரும் குறைபட்டு கொள்கிறார்கள். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் வகுப்பறை வசதி கூட இல்லாவிட்டால், சிரமம் தான்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கடந்த 1984-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகை மாவட்டத்தின் மாதிரி மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளி தொடர்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.

ஆயிரம் மாணவர்கள்

இங்கு எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1,167 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 50 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் மாணவாகள் படிப்பதற்கு போதுமான வகுப்பறை வசதிகள் இல்லை.

நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் 13 வகுப்புகள் தகர கொட்டகையிலும், மரத்தடியிலும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

பொதுமக்கள் வேதனை

கடந்த 2011-12-ம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகை மற்றும் சமூக ஆர்வலர் வழங்கிய நன்கொடை ரூ.15 லட்சத்தை சேர்த்து ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே இந்த பள்ளியில் நல்ல நிலையில் உள்ளன.

இந்த பள்ளியில் மொத்தம் 15 வகுப்பறைகள் உள்ளன. ஒரு வகுப்பறையில் இணைய வசதி, தொடு திரை வசதியும் உள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக 13 வகுப்பறைகள் மரத்தடியிலும், தகர கொட்டகையில் நடத்தப்படுகிறது என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 'வானமே கூரை, மர நிழலே காத்தாடி' என திறந்த வெளியில் வகுப்புகள் நடத்தப்படுவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வகம்

கூடுதலாக 28 வகுப்புகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை.

வகுப்பறை விளையாட்டு மைதானம், கழிவறை வசதியிலும் குறைபாடு உள்ளது. இந்த பள்ளியை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

பக்கிரிசாமி:- தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரையில் மரத்தடியிலும், தகர கொட்டகையிலும் பல வகுப்புகள் நடத்தப்படுகிறது பலமுறை அதிகாரிகளுக்கு கட்டிடம் கட்டவேண்டி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பல இடையூறுகளை சந்திக்கிறார்கள். மேலும் மழை காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பள்ளியில் உடனடியாக கூடுதல் வகுப்பறைகளை கட்ட வேண்டும்.

சுதன்:-

மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக திகழும் தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும், இப்பள்ளியில் படித்த மாணவ - மாணவிகள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com