சென்னையில் தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் தக்காளி விலை 'கிடுகிடு'வென உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னையில் தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது.

இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது இயல்பு.

அந்தவகையில் தற்போது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை 'கிடுகிடு' வென உயர்ந்து ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-

பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன.

இதனால் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது. இப்போதுள்ள சூழலில் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com