"தொல்லியல் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்ப்பு" - பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

தொல்லியியல் படிப்புக்கான தகுதிப் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
"தொல்லியல் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்ப்பு" - பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை, தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் படிப்புக்கான அறிவிப்பில், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முதுகலைப் பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொல்லியல் சார்ந்த இந்திய செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.

இதையடுத்து, அப்பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை மீண்டும் சேர்த்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் சேருவதற்கு தகுதியான படிப்புகளில், தமிழ் மொழி சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தவறு திருத்தப்பட்டது தமிழுக்கு கிடைத்த வெற்றி என, ராமதாஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com