பணி நிரந்தரம் வழங்கப்படாது: நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு - அண்ணாமலை

தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அரசாணை வந்திருக்கிறது. இதன் மூலம் நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற தவறியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் வழங்கப்படாது: நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு - அண்ணாமலை
Published on

நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமனம்

இதுதொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்துக்கு சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டனர். 6 மாத காலத்துக்கு வழங்கப்பட்ட தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால் 31.12.2022 வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ன?

இதற்கு முன் பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் நடத்தியபோது பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6 ஆயிரம் நர்சுகளுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத்துறையின் அரசாணையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன?. உடனடியாக 6 ஆயிரம் நர்சுகளுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பா.ஜ.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com