

சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தில் மாநில கணக்காயராக பணிபுரிந்து வருபவர் அருண் கோயல், தமிழக அரசின் பொதுப்பணிதுறையில் கணக்காளர் பணி நியமனம் செய்ய லஞ்சம் வாங்கியதாக இவரை சி.பி.ஐ. போலீசார் நேற்றுமுன்தினம் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கைது செய்தனர். அவரது அறையில் மேற்கொண்ட சோதனையில் மேலும் பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
அவருக்கு உதவியாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித்துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த எஸ்.சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும், சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவுக்கு மேலும் விடிய, விடிய சுமார் 15 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று அவர்களை ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது தவிர 2015-ம் ஆண்டில் தமிழக தலைமை கணக்காயராக அருண் கோயல் பொறுப்பேற்ற பிறகு, அவரது பெயரில் வாங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகள் பற்றிய விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மாநில கணக்காயர் அலுவலக ஊழியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, அருண் கோயல், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விடுப்பில் உள்ள ஊழியர்களை வரவழைத்து, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாகவும், இதன் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அடையும் பணப்பயன்களில் பெருமளவு தொகையை அருண் கோயல் லஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு அருண் கோயல் மீது பல்வேறு லஞ்ச புகார்களை ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.