அடுத்த 2 ஆண்டுகளில் 6 டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 6 வழக்கமான தகுதி தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன
சென்னை
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி ஆற்றவும், பதவி உயர்வுகளுக்கும் தகுதி தேர்வு கட்டாயம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு தகுதி தேர்வாவது நடத்த வேண்டும். இதன் மூலம் ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் தகுதி பெற்று ஆசிரியர்களாகும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 6 வழக்கமான தகுதி தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. ஒரு சிறப்பு தகுதி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கோர்ட்டு தீர்ப்பின் காரணமாக தகுதி தேர்வு என்பது ஆசிரியர்களுக்கு கட்டாய தகுதியானது. எனவே அடுத்த 2 ஆண்டுகளில் 6 தகுதி தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் நீண்டகாலம் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக ஒரு சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த மாதம் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு கட்டாயமாகிவிட்டதால், அடுத்த 2 ஆண்டுகளில் அடிக்கடி தேர்வுகளை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தகுதி தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் முறைகள், மொழி தொடர்பான பாடங்கள், பாடவாரியான அறிவு தேர்வுகள் ஆகியவை பாடத்திட்டத்தில் அடங்கும்,” என்றனர்.






