பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் கோவில் கல்வெட்டுகள்-விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் கோவில் கல்வெட்டுகள்-விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் கோவில் கல்வெட்டுகள்-விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் கோவில்கள் அறிவோம் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவன் முகம்மது சகாபுதீன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். புகைப்படக் கண்காட்சியை பள்ளி தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். மன்றச் செயலாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு பேசும்போது, தமிழ்நாட்டின் கோவில்கள் பண்பாடு, அறிவியல், மருத்துவம், கல்வி, கலை, வரலாறு, தொல்லியல் ஆகியவற்றின் அருங்காட்சியகங்களாக விளங்குகின்றன. பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய கோவில் கல்வெட்டுகள் உதவுகின்றன. கோவில்களில் பின்பற்றப்பட்ட மரபு தொழில்நுட்பம் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. கோவில்களின் சிறப்புகளை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும். கோவில்கள் நம் பண்பாட்டின் அடையாளமாக உள்ளன. பள்ளி பாடநூல்களில் நமது பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தரங்கம் மற்றும் புகைப்பட கண்காட்சிகள் கோவில்கள் பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன என்றார். கருத்தரங்கில் கோவில் பற்றி பைரோஸ், குடைவரை கோவில்கள் பற்றி திவாகரன், கற்றளிகள் பற்றி ஹரிதா ஜீவா, பள்ளிப்படைக் கோவில்கள் பற்றி கனிஷ்கா, மாடக்கோவில்கள் பற்றி பூஜாஸ்ரீ, கோவில் காப்புக் காடுகள் பற்றி மகாஸ்ரீ ஆகியோர் பேசினர். மாணவிகள் தீபிகாஸ்ரீ, வித்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். புகைப்பட கண்காட்சியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோவில்கள், முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கற்கோவில்கள், பள்ளிப்படை, மாடக்கோவில்கள், காடுகள் சூழ்ந்த கோவில்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகமது காமில், செல்வக்கண்ணன், சாம்ராஜ், யோகேஷ்வரன், முகேஷ்பிரியன் ஆகியோர் செய்தனர். மாணவி சுபா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com