மின்துறையை தனியார் மயமாக்கும் டெண்டரை இறுதி செய்யக்கூடாது - புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மின்துறையை தனியார் மயமாக்கும் டெண்டரை இறுதி செய்யக்கூடாது - புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுவையில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் புதிதாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனாலும் மறைமுகமாக மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடப்பட்டது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர். இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடை ஆனதால் அவதிக்குள்ளான பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடம் நடத்தினர்.

இந்த நிலையில் புதுச்சேரில் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புதுவை மின்துறை சான்றிதழ் பெற்றோர் நலசங்கம் மற்றும் மின்துறை ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்பேது புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக்கூடாது என புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com